சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அறிவிப்பாணைக்கு எதிராக ஆன்லை விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கு கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து அப்போது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிர்ஷ்டத்திற்கான ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தது செல்லும் என தீர்ப்பளித்தது.
அதே சமயம் திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திறமைகளுக்கான விளையாட்டுகளுக்கு வயது, நேரம், உள்ளிட்டவைகளை கொண்டு விதிமுறைகளை உருவாக்க 2023-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து 2025-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதில் சில விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் எண்களை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரையும் விளையாட அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விதிகளை எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7, ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசு அறிவித்த விதிமுறைகள் வர்த்தக உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது என வாதிட்டனர். தற்கொலைகளுக்கு பல காரணங்கள் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்டனர் என்பதை ஏற்கொள்ள முடியாது எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். காசு கொடுத்து விளையாடுவதால் ஆன்லைன் ரம்மியும் சூதாட்டம் தான் எனவும், ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும், எனவே இதனை ஒழுங்குபடுத்துவது அரசின் பொறுப்பு என்றும் தெரிவிக்கபப்ட்டது. அதுமட்டுமின்றி பாஸ்போர் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வயது சரிபார்க்க முடியது என்பதால் தான் ஆதார் எண் கேட்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் வாத, பிரதிவதங்கள் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த விதிமுறைகள் செல்லும் எனவும், கட்டுபாடுகளை நீக்க ஆன்லைன் நிறுவனங்கள் அதிகாரமாக கேட்க முடியாது எனவும், அரசுக்கு இது போன்ற விதிமுறைகளை வகுப்பதற்கும், மக்களின் நலனை பாதுகாக்கவும் அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.