புதுடெல்லி: விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் விநியோகத்தை அதிகரிக்கவும் வெங்காயத்தின் மீது 40 சதவீத ஏற்றுமதி வரியை ஒன்றிய அரசு விதித்துள்ளது. நாட்டில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதைத் தொடர்ந்து, வெங்காயத்தின் விலையும் அதிகரித்தது. இதனால் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தனது கையிருப்பில் உள்ள 3 லட்சம் டன் வெங்காயத்தை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில், விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு சந்தையில் விநியோகத்தை மேம்படுத்தவும் வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரி விதிக்கப்படுவதாக ஒன்றிய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இந்த 40 சதவீத ஏற்றுமதி வரி, வரும் டிசம்பர் 31 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வெங்காயத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஒன்றிய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.