புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டதை வாபஸ் பெறக் கோரி மும்பை வியாபாரிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டதல்ல என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலை அடுத்த மாதம் உயரக்கூடும் என கணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை ஒன்றிய அரசு விதித்தது. அதைத் தொடர்ந்து, வெங்காய கையிருப்பை 5 லட்சம் டன்னாக உயர்த்த மேலும் 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்யப் போவதாக அறிவித்தது.
அதோடு, தேசிய கூட்டுறவு நுகர்வோருக்கான கூட்டமைப்பு சார்பில் ஒரு கிலோ வெங்காயம் ரூ25க்கு விற்பனை செய்யவும் தொடங்கியது. இந்நிலையில், ஒன்றிய அரசின் ஏற்றுமதி வரி விதிப்பு நடவடிக்கைக்கு வெங்காய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய வெங்காய ஏல சந்தையான மும்பையின் லசல்கான் உட்பட நாசிக் மாவட்டத்தின் வேளாண் உற்பத்தி சந்தை குழு கூடங்களில் நேற்று வெங்காய ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதே சமயம் அம்மாவட்டத்தின் வேறு சில சந்தை கூடங்களில் ஏலம் வழக்கம் போல் நடந்தது.
இந்நிலையில், வியாபாரிகள் போராட்டம் குறித்து ஒன்றிய நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதிப்பு அவசரப்பட்டு எடுத்த முடிவல்ல. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. இதன் மூலம் விலை உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. அரசு தனது கையிருப்பில் உள்ள வெங்காயங்களை மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கும். தற்போது டெல்லி, தெலங்கானா, ஆந்திரா, இமாச்சல் மற்றும் அசாம் மாநிலங்களில் இருந்து கையிருப்பு வெங்காயங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 2,500 டன் வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனைக்கு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
பருப்பு விலையும் உயரும் அபாயம்
ஆகஸ்ட் மாதம் போதிய மழை இல்லாததால் பருப்பு விலை உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த ஜூலையில் 34.1 சதவீதம் விலை உயர்ந்த துவரம் பருப்பும், 9.1 சதவீதம் விலை உயர்ந்த பாசிப்பருப்பும் இனி மேலும் விலை உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். நடப்பு காரிப் பருவத்தில் 114.9 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டாலும், போதிய மழை இல்லாததால் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்காது என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
* நாடு முழுவதும் தக்காளி கிலோ ரூ.250க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை ரூ50 முதல் ரூ70 ஆக குறைந்துள்ளதாக ஒன்றிய நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் கூறினார்.
* கடந்த ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை இந்தியாவிலிருந்து 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.