புதுச்சேரி: வெளிப்படையான, திறமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிர்வாகத்தை நோக்கிய முயற்சிகளில் ஒன்றாக, புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேசிய இ-சட்டப்பேரவை செயலியை (நேவா) ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் புதுச்சேரியில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், முதல்வர் என்.ரங்கசாமி, சபாநாயகர் ஆர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: பிரதமர் மோடியின் 3வது முறையான ஆட்சி 12ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வந்தபோது காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், படிப்பு விஷயம் தெரியாதவர்களால் செல்போன் பயன்படுத்த தெரியாது. இதை எப்படி பயன்படுத்துவார்கள்? என கேள்வி கேட்டார். ஆனால் இன்று இந்தியா முழுவதும் பல கிராமங்களில் இ-பேமென்ட்டை மக்கள் பயன்படுத்துகின்றனர். சத்தியமங்கலத்தில் நான் வெள்ளரிக்காய் வாங்கியபோது, பணத்தை இ-பேமென்ட் செலுத்தும்படி அந்த வியாபாரி கூறும் நிலை இன்றைக்கு உருவாகியுள்ளது.
உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2வது இடத்தை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்திய பொருளாதாரம் உலகளவில் 4ம் இடத்தை பிடித்துள்ளது. 2027-ல் 3-ம் இடம், 2047-ல் அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு நாடாக இந்தியா மாறும். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தலும் விரைவில் வரப்போகிறது. தற்போது ஒரு நாடு, ஒரு செயலி என இப்போது நேவா செயலி எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டசபை, நாடாளுமன்றத்தில் நடப்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது இந்த நேவா செயலி மூலம் கொண்டுவரப்படவுள்ளது. புல்லட் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டத்தை இயற்றும் பணியில் இந்த செயலி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். நாட்டில் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டசபை நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்க நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஒரே நாடு ஒரே செயலி என்ற திட்டத்தின்படி அனைத்து மாநில சட்டசபைகளும் காகிதமில்லா மின்னணு நடவடிக்கைக்கு மாறும் வகையில் ரூ.673.94 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது.