திருமலை: கேட்பதற்கு முன்பே ஒரு லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்கிறார்கள். நாட்டின் செல்வத்தை அதானியிடம் ஒன்றிய அரசு கொட்டி வைத்துள்ளது என்று தெலங்கானாவில் நடந்த பிரசார யாத்திரையில் ராகுல்காந்தி பேசியுள்ளார். தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை நேற்றுமுன்தினம் துவங்கிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியதாவது: தெலங்கானாவில் காங்கிரசை தோற்கடிக்க பி.ஆர்.எஸ், பாஜக, மற்றும் எம்.ஐ.எம். கட்சிகள் சதி செய்கின்றன. அந்த மூன்று கட்சிகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கின்றன. ஓவைசியின் கட்சி எங்கு எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதை பாஜகதான் முடிவு செய்கிறது.
பாஜகவுக்கு எதிராக கே.சி.ஆர் போராடியிருந்தால் அவர் மீது ஏன் இ.டி. மற்றும் சி.பி.ஐ வழக்குகள் இல்லை. இதன் மூலம் பாஜகவும்- பிஆர்எஸ்சும் ஒரே கட்சி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதானிக்கு கேட்பதற்கு முன்பே ஒரு லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், விவசாயக் கடன், தொழிலாளி கடன், சுயதொழில் கடனை தள்ளுபடி செய்வதில்லை. நாட்டின் செல்வத்தை அதானியிடம் மத்திய அரசு ஒப்படைத்துவிட்டது. இவ்வாறு பேசினார். இதையடுத்து சிங்கிரேணி நிலக்கரி வெட்டும் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கலந்துரையாடினார்.
* ராகுல்காந்திக்கு முதல்வர் மகள் பதிலடி
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.சி.யுமான கவிதா கூறியதாவது: தெலங்கானாவில் நல்ல சூழல் நிலவி வருகிறது. ராகுல் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இங்கு அதனை கெடுக்க வேண்டாம். பத்தாண்டுகளாக தெலங்கானாவுக்கு எதுவும் செய்யவில்லை, ஆனால் ஓட்டுக்காகத்தான் இப்போது தேசியத் தலைவர்கள் அனைவரும் தெலங்கானாவுக்கு கூட்டம் கூட்டமாக வரிசை கட்டி வருகிறார்கள் என்றார்.