சென்னை: பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 37,328 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை கூட்டுறவுத் துறை, உணவுத் துறை உள்ளிட்ட பல துறைகளின் கீழ் செயல்பட்டு வருவதால், அதில் பணியாற்றும் பணியாளர்களின் பணிச்சூழல், ஊதியம் உள்ளிட்டவற்றில் பாகுபாடுகள் காணப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தால் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதனால் நியாயவிலை கடை பணியாளர்களின் துயரங்கள் தொடருகின்றன. அவர்களுக்கான ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் கேட்பாரற்று கிடக்கின்றன. எனவே நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.