இம்பால்: இனக்கலவரங்களுக்கு மத்தியில் மணிப்பூரில் இன்று ஒரு நாள் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தை 10 குகி இன எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் குகி இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு மெய்டீஸ் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறைக்கு இதுவரை 170 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மணிப்பூரில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறப்பட்டாலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இம்பால் மேற்கு மாவட்டத்தில் மூன்று வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது.
அதோடு பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களையும் பறித்து சென்றது. அங்கு தொடர் பதற்றம் நிலவி வரும் நிலையில், மணிப்பூரில் இன்று ஒரு நாள் சட்டப்பேரவை கூடியது. இக்கூட்டத்தில் இன மோதல் தொடர்பான விவாதங்கள், தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சட்டமன்ற கூட்டத்தை பெரும்பாலான குகி இன எம்எல்ஏக்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காக கூட்டத்தில் பங்கேற்கவில்லை. குறிப்பாக குகி ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த பத்து எம்எல்ஏக்களில் 6 பேர் ஏற்கனவே பேரவைத் தலைவரிடம் விடுப்பு கேட்டுள்ளனர். முன்னதாக கடந்த மாதம் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் கூட்டத் தொடரை நடத்த பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின் 2 முறை தேதி மாற்றப்பட்டு இன்று சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்தது.