திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தலவூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட முறை மின்சாரம் கண்ணாமூச்சி காட்டும். இதனால் அந்த கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். பலமுறை புகார் செய்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இது தவிர சமீபத்தில் கேரளாவில் மின் கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. ஏற்கனவே அடிக்கடி ஏற்படும் பவர் கட்டால் நொந்து போயிருந்த இந்த கிராம மக்களுக்கு மின்கட்டண உயர்வும் ஒரு பேரிடியாக அமைந்தது. இந்த சமயத்தில் தான் மின்வாரிய ஊழியர்களுக்கு பாடம் புகட்ட இந்த கிராம பஞ்சாயத்தின் வார்டு கவுன்சிலரான ரஞ்சித்துக்கு ஒரு யோசனை உதித்தது.
தன்னுடைய வார்டை சேர்ந்த 9 வீட்டினருக்கான மின்கட்டணத்தை சில்லறையாக கொடுத்து மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க அவர் ஒரு திட்டம் தீட்டினார். இதன்படி 9 வீட்டினரின் மின்கட்டணத்திற்கான பணம் ரூ.7 ஆயிரத்தை வாங்கி அதை அங்குள்ள ஒரு கோயிலில் கொடுத்து ரூ.5, ரூ.2, ரூ.1 என சில்லறையாக மாற்றினார். பின்னர் அதை ஒரு சாக்கில் கட்டி நேராக அங்குள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று கொடுத்தார். 7 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறையாக கொண்டு வந்ததைப் பார்த்த அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். வார்டு கவுன்சிலர் என்பதால் அதை வாங்காமல் இருக்கவும் முடியாது. வேறு வழியின்றி அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து பல மணிநேரம் அந்த சில்லறையை எண்ணி சரி பார்த்து அதற்கான ரசீதையும் கொடுத்தனர்.
இதுகுறித்து கவுன்சிலர் ரஞ்சித் கூறியது: இதன் பிறகும் இந்த நிலை தொடர்ந்தால் என்னுடைய வார்டில் உள்ள 450 வீடுகளுக்கான மின் கட்டணத்தையும் இதே போல சில்லறையாக கொண்டு கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.