அகமதாபாத்: குஜராத்தில் பெய்த கனமழைக்கு ஒரே நாளில் 19 பேர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 26 ஆகியுள்ளது. பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வதோதரா, மோர்பி, ராஜ்கோட், போர்பந்தர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வதோதரா நகரில் உள்ள விஸ்வாமித்ரி நகரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வதோதராவில் உள்ள பல பகுதிகளில் 12 மீ உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அபாய நிலை அடைந்ததை அடுத்து மீட்பு பணிகளுக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் இருந்து 18 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 19 பேர் பலியாகிவிட்டனர். இதனால் 2 நாள் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 26ஆக உயர்ந்து விட்டது. பஸ்,ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் ரயில் உள்பட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மழை நிலைமை குறித்து மாநில முதல்வர் பூபேந்திர படேலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது மாநிலத்துக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.