Wednesday, February 21, 2024
Home » ஒரே நாடு ஒரே தேர்தல் முயற்சி நடைமுறை சாத்தியமற்றது ஒன்றிய அரசை திருப்திப்படுத்த அரசியல் சட்டத்தை சிதைப்பதா? உயர்நிலைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தல் முயற்சி நடைமுறை சாத்தியமற்றது ஒன்றிய அரசை திருப்திப்படுத்த அரசியல் சட்டத்தை சிதைப்பதா? உயர்நிலைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கடிதம்

by Karthik Yash

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் முயற்சி நடைமுறை சாத்தியமற்றது என்றும், ஒன்றிய பாஜ அரசை திருப்திபடுத்த அரசியல் சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ உயர்நிலைக்குழு துணை போகக்கூடாது என்றும் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு’ எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழுவுக்கு திமுக நேற்று எழுதிய கடிதம்: ஏற்கனவே 2023 டிசம்பர் 23ம்தேதி சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த திமுகவின் கருத்துக்களை கோரியது. இதற்கு திமுக கடிதத்தின் வாயிலாக ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு’ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு நேரடி விசாரணைக்கு எவ்வித தகவலும் திமுகவுக்கு அனுப்பப்படவும் இல்லை. அந்த சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு தொடர் நடவடிக்கையும் என்னவென்று தெரியவில்லை.

இதில் முக்கிய அம்சம், 2022ல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது சம்பந்தமாகத்தான் ஆலோசனை கோரியது. ஆனால், தற்பொழுது ஒன்றிய அரசு இதை விரிவுபடுத்தி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட சபைகளோடு, நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு, அரசியலமைப்பு பிரிவு 73-ன் கீழ் ஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்ட நிர்வாக அதிகாரத்தின் மூலம் அமைக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உயர்வானது அல்ல. எனவே இந்த உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளதே செல்லாத ஒன்றாகும். மாநில அரசின் பட்டியலில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் தேர்தல் நடைமுறை பற்றி விசாரிக்க ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த உயர்நிலைக்குழுவிற்கு அதிகாரமில்லை என்பது திமுகவின் திட்டவட்டமான கருத்து. நாடாளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பின்வரும் காரணங்களால் சாத்தியமற்றது என்பதை திமுக ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் உள்ள சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை திமுக எதிர்க்கிறது. ஒன்றிய ஆளுங்கட்சியும் மெஜாரிட்டியை இழந்தால் ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் ஒரே நாடு ஒரே தேர்தல் முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.

இது தேசியக் கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது. எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தேர்தல் ஆணையத்திற்கு, தேர்தல் ஆணையர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு எல்லாம் 10 மடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கை 3 முதல் 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதால் கட்டுக் கடங்காத செலவினத்தை ஏற்படுத்தும். நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆகவே இவற்றுக்கும் சட்டமன்றம், நாடாளுமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்ட விரோதமானது.

தேர்தல் ஆணையத்திடம் போதிய வாக்குப்பதிவு இயந்திரங்களும் இல்லை. இதற்கே பல லட்சம் கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிதி சுமை ஏற்படும் என்பதால் இந்த தேர்தல் நடைமுறையால் நிதி சிக்கனம் ஏற்படாது. ஓரே நேரத்தில் தேர்தலை திணிப்பதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது மாநில உரிமை மற்றும் அரசியல் சட்டத்தால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிப்பதாகும். இது ஒன்றிய, மாநில அரசு உறவுகளில் மட்டுமல்ல ஒன்றியத்திற்கே கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து மிக்க முயற்சி.

இது போன்ற தேர்தல் நடைமுறை பற்றிய முடிவை உயர்நிலைக்குழு விளையாட்டாக எடுத்து, அதிகாரப் பசியுடன் இருக்கும் ஒன்றிய பாஜ அரசை திருப்திப்படுத்த நினைக்க கூடாது. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசியல் சட்டத்தை நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் சிந்தித்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படும் நாடாளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு உயர்நிலைக்குழு துணை போக கூடாது.

இறுதியாக, மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்களினால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மிக கடுமையாக திமுக எதிர்க்கிறது. ஆகவே உயர்நிலைக்குழு இது தொடர்பான தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திமுக, சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக்கை எடுக்க தள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் போதிய வாக்குப்பதிவு இயந்திரங்களும் இல்லை. இதற்கே பல லட்சம் கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிதி சுமை ஏற்படும் என்பதால் இந்த தேர்தல் நடைமுறையால் நிதி சிக்கனம் ஏற்படாது.

You may also like

Leave a Comment

eighteen + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi