Sunday, April 14, 2024
Home » ஒரே நாடு, ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானங்களுக்கு அதிமுக, பாஜ ஆதரவு: தென்னிந்தியாவுக்கு பெரும் ஆபத்து எனவும் எச்சரிக்கை

ஒரே நாடு, ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானங்களுக்கு அதிமுக, பாஜ ஆதரவு: தென்னிந்தியாவுக்கு பெரும் ஆபத்து எனவும் எச்சரிக்கை

by Karthik Yash

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக கொண்டு வந்த 2 தனி தீர்மானங்கள் மீது அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசியதாவது: அவை முன்னவர் துரைமுருகன்: ஒரு தீர்மானம் ஜனநாயகத்தை காப்பாற்றும் முயற்சி. ஒன்றிய அரசு நமது கழுத்தை நெரிக்கும் முயற்சியை தடுக்கும் நடவடிக்கை. 2வது தீர்மானம், மக்கள் தொகை அடிப்படையில் நமது உரிமையை காப்பாற்றக் கூடிய தீர்மானம். தற்போது, மத்தியில் உள்ளவர்கள் ஒரே மதம் உள்ள நாடாக, ஒரே கடவுள் உள்ள நாடாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். எனவே, நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றுதான், நமது தலைவர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.

தளவாய் சுந்தரம் (அதிமுக): அதிமுகவை பொறுத்தவரை 13-1-2024 அன்று ஒன்றிய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவிடம் 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்துள்ளோம். அந்த கோரிக்கைகளை, ஒரு சில நாட்களில் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. 2024 முதல் 2034க்குள் கோரிக்கையை ஆலோசித்து, எங்களுக்கு சாதகமான பதில் வந்தால் மட்டுமே நாங்கள் இதை ஆதரிப்போம்.
அருள்மொழிதேவன் (அதிமுக): ஒன்றிய அரசு அறிவித்த குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் சிறப்பாக நிறைவேற்றியது. இதனால் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால், வடமாநிலங்களில் அப்படி இல்லை. தமிழகத்தில் தற்போது உள்ள தொகுதிகளை குறைக்க கூடாது என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.
செல்வப்பெருந்தகை (காங்): ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் தேர்தல் செலவை குறைக்கலாம் என்கிறார்கள். தற்போதைய தேர்தல் செலவு என்பது, பிரதமர் வெளிநாடு செல்லும் செலவை விட குறைவானது. தமிழ்நாட்டின், தென்னிந்தியாவின் உரிமையை பறிக்கும் முயற்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முறியடிக்க வேண்டும்.

வானதி சீனிவாசன் (பாஜ): தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் தொகுதிகள் குறைக்கப்படலாம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக தமிழக பாஜ, அந்த கவலையை புரிந்து கொண்டு, வேண்டிய இடத்தில் இதுபற்றி பேசுவோம். ஒவ்வொரு வாக்குச் சீட்டுக்கும் உள்ள மரியாதை, மக்களை விட உறுப்பினர்களுக்கு நன்றாக புரிந்து கொண்டிருக்கும். தேர்தல் சீர்திருத்தம் என்பது தொடர்ச்சியான நடவடிக்கை. ஆனால் இங்கு பேசியவர்கள், ஏதோ பாசிசம், அதிபர் என்று கற்பனை செய்து பேசுகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலையை கொண்டு வருவதற்கு முன்னதாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி அனைவரிடமும் கருத்து கேட்டு வருகிறார். யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை சொல்லலாம். உள்ளாட்சி தேர்தல் பற்றி எல்லாம் அதில் இடம்பெறவில்லை.

தற்போது கூட, நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அப்போது 3 மாதம், மாநிலத்தில் மக்கள் திட்டங்களை அறிவிக்க முடியாதநிலை ஏற்படும். அதனால், இதுபோன்ற சீர்திருத்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர் கலைஞர் கூட, தனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவான கருத்துக்களை கூறியிருக்கிறார். அதனால் இந்த தீர்மானம் அவசியமற்றது. மேலும், சிந்தனைச்செல்வன் (விசிக), சின்னத்துரை (மார்க்சிஸ்ட்), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூ.), சதன்திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் பேசினர்.

You may also like

Leave a Comment

7 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi