புனே: ‘ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் மோடி பேசிய அடுத்த நாளே வெவ்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுகின்றன’ என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்.சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் புனேவில் நேற்று அளித்த பேட்டியில், ‘சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தலை வலியுறுத்தி பேசினார். ஆனால் அடுத்த நாளே ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கு வெவ்வேறு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுகின்றன. பிரதமர் மோடி பேசுவது ஒன்றாகவும், நிர்வாக அமைப்புகள் எடுக்கும் முடிவுகள் வேறொன்றாகவும் இருக்கின்றன’’ என்றார்.
மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணி அரசின் மகளிர் நிதி உதவி திட்டம் காரணமாக டிசம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சரத் பவார், ‘‘இதை தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும். ஏற்கனவே உள்ள பல்வேறு நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு கல்வி நிதி தர அரசிடம் பணம் இல்லை என கூறும் பாஜ கூட்டணி அரசு, நிதிச் சுமையை ஏற்படுத்தும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது’’ என்றார். இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என துணை முதல்வர் அஜித் பவார் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு சரத் பவார், ‘‘இதுபோன்ற முடிவை எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் துணை முதல்வர் என்றால் என்ன என்று எனக்கு சரியாகத் தெரிவில்லை’’ என கிண்டல் செய்தார்.