சென்னை: 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய தொழில் திட்டங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பின்னர் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; இன்று 19 வகையிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.
ரூ.51,157 கோடி மதிப்பீட்டில் 28 வகையான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். புதிய தொழில் திட்டங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நமது பொருளாதார திறனை உலகுக்கு எடுத்துக்காட்டும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியுள்ளோம். மாநாடுகள் மூலம் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது. 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு வந்துள்ளது. தொழில்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் அடையாளமாக கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான முதலீடுகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ள தொழிலதிபர்கள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைக்க வேண்டும். அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்டங்கள் வளர்ச்சி.
இந்தியாவிலேயே திறன் மிகு தொழிலாளர்களை கொண்ட மாநிலம் அதிக பெண் தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. நாட்டிலேயே தொழில் தொடங்க பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பது உலகுக்கே தெரியும். தமிழ்நாட்டில் பரவலான மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை உறுதிசெய்வதே திமுக அரசின் நோக்கம். புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதும் நமது கடமை முடிந்ததாக எண்ணவில்லை. மாநாடு நடத்துவதை விட அதன்மூலம் வரும் முதலீடுகள் எவ்வளவு என்பதில்தான் வெற்றி உள்ளது. 2030ம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்கா டாலர் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்படுகிறது என்று கூறினார்.