சென்னை: பாஜ ஆளும் மாநிலங்களுக்கு எல்லாம் நிதியை வாரி வழங்கிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை மதிக்கவே இல்லை. இந்தியாவின் வரைபடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை இணைப்பது இருப்புப் பாதைகள்தான். ஆனால், இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போடுவது போலப் போட்டிருக்கிறார்கள் என்று டி.ஆர். பாலு காட்டமாக குறிப்பிட்டுள்ளார். திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கை:
பிரதமர் மோடி தலைமையில் 3வது முறையாக ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த ஒன்றிய அரசு, இன்றைக்கு ரயில்வே திட்டங்களிலும் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பிறகு ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகி இருக்கிறது. அதில்தான் தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு 976 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அத் தொகையை 301 கோடியாக குறைத்துவிட்டார்கள். இரட்டைப்பாதை திட்டங்களுக்குத் தேர்தலுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 2,214 கோடி ரூபாயை 1,928 கோடியாக சுருக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாயை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை – மாமல்லபுரம்- கடலூர் கடற்கரைப் பாதைக்கு 25 கோடி ரூபாய் முன்பு ஒதுக்கப்பட்டிருந்தது.
இப்போது வெறும் 1000 ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி – இருங்காட்டுக்கோட்டை -ஆவடி லைனுக்கு முன்பு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் 1000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததை வெறும் 18 கோடியாக குறைத்துவிட்டார்கள். இப்படிப் பல திட்டங்களுக்கு நிதி பெரும் அளவில் குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு.
புயலால் அழிந்து போன தனுஷ்கோடி ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இத் திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் 1 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதனை இப்போது 56 லட்சம் ரூபாயாகக் குறைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் பரப்பளவு, மக்கள் தொகை, இருப்புப் பாதைகளின் நீளம், தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் நிதி ஆகியவற்றை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதிகூட கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தமிழ்நாட்டின் மொத்த இருப்பு பாதையின் நீளம் 5,952 கிமீ அளவைவிடக் குறைவான இருப்புப் பாதைகள் கொண்ட மாநிலங்களுக்கு எல்லாம் நிதியை வாரி வழங்கிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை மதிக்கவே இல்லை. இந்தியாவின் வரைபடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை இணைப்பது இருப்புப் பாதைகள்தான். ஆனால், இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போடுவது போலப் போட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசாதான் கொடுக்கிறார்கள். ஆனால், பாஜ ஆளும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் கொடுக்கிறார்கள். கோடிகளில் ஒதுக்கப்படும் ரயில்வே திட்டங்களுக்கு லட்சங்களை அல்ல, வெறும் ஆயிரங்களை ஒதுக்கித் தமிழ்நாட்டை ஓரங்கட்டியிருக்கிறார்கள். 4 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த விழாவிற்குச் செய்த செலவு 5.6 கோடி ரூபாய் அளவுக்குக்கூட பெறத் தகுதியில்லாத மாநிலமா தமிழ்நாடு?
சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தைத் தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம் என்றார்கள். அவையெல்லாம் என்ன ஆகும் என்பது ஒன்றிய அரசுக்கே வெளிச்சம். கடந்த 3 ஆண்டுகளில் காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்கள் டிக்கெட்டை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வே துறைக்குக் கிடைத்த 1,229 கோடி ரூபாய் வருவாய் எல்லாம் எங்கே போனது?. மெட்ரோ ரயில் திட்டங்களில் கூட தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்காமல் வஞ்சித்தனர். 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இதுவரை ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் ஒதுக்கவில்லை.
இதுபற்றி மக்களவையில் திமுக எழுப்பிய கேள்விக்கு, ’’சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்டப் பணிகள் தற்போதைக்கு மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது. எனவே, அதற்கான செலவுகளைத் தமிழ்நாடு அரசே செய்கிறது’’ என்ற அதிர்ச்சி பதிலைத் தந்தார்கள். ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கினார்கள்.
ஆனால், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அதுகூட இல்லை என கையை விரித்துவிட்டார்கள். பாஜ கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பூஜ்ஜியம் கொடுத்தற்காகத் தமிழ்நாட்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்குப் பூஜ்ஜியம் அளித்திருக்கிறார்கள். ஆட்சி அமைக்க வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் ஒரு அரசு செயல்படும். ஆனால் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.