சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக குறைந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.840 உயர்ந்தது. மாத தொடக்க நாளான நேற்று தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடியாக உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,160க்கும் விற்பனையானது. கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் ஒரே நாளில் பவுன் ரூ.840 எகிறியது
0