காரைக்குடி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த முடியாது’ என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் பலம் அடைந்து வருகிறது. மக்கள் ஆதரவும் அதிகரித்துள்ளது. இதனால் பாஜ பதற்றம் அடைந்துள்ளது. மகத்தான இக்கூட்டணியை அரசியல்ரீதியாக எதிர்க்க முடியாமல் சாகசகங்கள் மூலம் பாஜவினர் வெற்றி பெற முயற்சி செய்கின்றனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் எடப்பாடி பழனிசாமி கையில் இல்லை. அவர் மேலிடம் சொல்வதை செய்யக் கூடிய சேவகராக உள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சட்டபூர்வமான சடங்குகள் ஏராளமாக உள்ளன. இதன் மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடக்காது. சட்டபேரவையை கலைத்து விட்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாது. அது பிரதமர் மோடிக்கும் தெரியும். மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடுவோம் என நப்பாசையில் உள்ளனர்.