திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் புறவழி சாலையில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் தங்களது சேமிப்பு கடன், சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு பணப்பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்கள். இந்த வங்கியில் நள்ளிரவு ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது வங்கியின் அலாரம் ஒளிந்துள்ளது.
வங்கியின் அலாரம் ஒலித்ததை கண்டு சுதாரித்த வங்கியின் மேலாளர் வீட்டிலிருந்தபடியே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஜன்னல் கண்ணாடி மற்றும் இரும்பு கம்பிகளை அறுத்து கொள்ளையன் உள்ளே புகுந்திருப்பதை உறுதி செய்து உடனடியாக கொள்ளையனை பிடித்து செங்குன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சென்னை வீராபுரத்தை சேர்ந்த 45 வயதான சுரேஷ் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த நபரிடம் செங்குன்றம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இதே போன்று வேறு இடங்களில் ஏதேனும் கொள்ளை சம்பங்களில் அரங்கேற்றினாரா, வங்கியில் கொள்ளை மேற்கொள்ளும் கூட்டத்தை சேர்ந்தவரா என்பது குறித்த விசாரணையும். இவருடன் கூட்டாளிகள் யாரேனும் வந்து அங்கு காத்திருந்தார்களா என்பது போன்ற பல்வேறு விசாரணைகளை செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனர். வங்கியில் அலாரம் ஒலித்ததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் தப்பி உள்ளது.