சென்னை: தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தெற்கு சரகத்தில் நேற்று சிறப்பு வாகன சோதனை மற்றும் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை தெற்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ஏ.ஏ.முத்து உத்தரவின்படி அனைத்து தெற்கு சரக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இணைந்து சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இதில் செயலாக்க பிரிவு வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத் குமார் தலைமையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆய்வாளர்கள் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ், போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் வாகனங்களை ஆய்வு செய்தனர். மேலும் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் நேற்று காலை பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாகன ஆய்வாளர்கள் பரனூர் சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் அதிவேகமாக வரக்கூடிய வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள், அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. குறிப்பாக செல்போன் பேசிக்கொண்டு ஓட்டி வந்த வாகனங்கள், சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகனங்கள், எப்சி மற்றும் இன்சூரன்ஸ் காலாவதியான வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றுவது உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனங்களை பிடித்து ஆய்வு செய்து அபராதம் விதித்தனர். மேலும் ஆம்னி பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதி வேகமாக வந்த வாகனங்களுக்கு ஸ்பாட் பைன் வசூலிக்கப்பட்டது.
விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது கன்னியாகுமரியில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த நாகாலாந்து மாநில பதிவு எண் கொண்ட ஆவணங்கள் இல்லாத இரண்டு ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வாகன தணிக்கைகளில் 500க்கும் அதிகமான வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் விதிகளை மீறிய இயக்கப்பட்ட 138 வாகனங்கள் கண்டறியப்பட்டு சோதனை அறிக்கை வழங்கி ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாத மற்றும் அதிக கட்டணம் வசூலித்த புகாரின் அடிப்படையில் 2 ஆம்னி பேருந்துகளும், தகுதிச்சான்று, அனுமதிச்சீட்டு முடிவடைந்து இயக்கப்பட்ட ஒரு பேருந்து என 3 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டது. இது குறித்து செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுந்தரமூர்த்தி கூறுகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, சாலை பாதுகாப்பு நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.