சேலம்: ஓணம் பண்டிகையையொட்டி சேலம் வழியே கொச்சுவேலி- பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்கத்தை அறிவித்து வருகிறது. இதன்படி, கொச்சுவேலி- பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06083), அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 24ம் தேதி வரை (4 சேவை) இயக்கப்படுகிறது. கொச்சுவேலியில் இருந்து செவ்வாய்கிழமை தோறும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு வழியே போத்தனூருக்கு அடுத்தநாள் அதிகாலை 1.58க்கும், திருப்பூருக்கு அதிகாலை 3.15க்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 4.10க்கும் வந்து சேலத்திற்கு காலை 5.07 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜ்புரம் வழியாக பெங்களூருக்கு காலை 10.55 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், பெங்களூரு-கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06084), அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரை (4 சேவை) இயக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து புதன்கிழமை தோறும் காலை 12.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கிருஷ்ணராஜ்புரம், பங்காருபேட்டை வழியே சேலத்திற்கு மாலை 4.57 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு ஈரோட்டிற்கு மாலை 5.50க்கும், திருப்பூருக்கு இரவு 6.45க்கும், போத்தனூருக்கு இரவு 8.15க்கும் சென்று பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கானூர், கொல்லம் வழியே கொச்சுவேலிக்கு அடுத்தநாள் காலை 6.45 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.