கன்னியாகுமரி: ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தோவாளை மலர்சந்தையில் ஒரே நாளில் 1000டன் மலர்கள் விற்பனையாகியுள்ளன. ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடக்கி களைகட்டி வருகிறது. குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் 2வது நாளாக சிறப்பு விற்பனை நடந்தது. விடிய விடிய நடந்த விற்பனையில் ஏராளமானோர் வந்து பூக்களை வாங்கி சென்றனர்.
நேற்று ஒரே நாளில் 1000 டன் மலர்கள் விற்பனை செய்யப்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500டன் மலர்கள் தோவாளை சந்தைக்கு வந்துள்ளன. வரத்து அதிகரித்துள்ளதால் இன்று மலர்கள் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனையான வாடாமல்லி இன்று வெறும் ரூ.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ரூ.400க்கு விற்பனையான செவ்வந்தி ரூ.250க்கும் ரூ.150க்கு விற்பனையான மரிக்கொழுந்து ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மல்லிகை விலை ரூ.1000 லிருந்து ரூ.600 ஆக குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மலர் சந்தையிலும் பூக்கள் விலை சரிந்துள்ளது. முகுர்த்த நாள் வரலட்சுமி நோன்பு உள்ளிட்டவை காரணமாக சில தினங்களாக கோயம்பேட்டில் பூக்கள் விலை அதிகமாக இருந்தது. தற்போது வரத்து அதிகரித்ததால் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.400க்கும் விற்கப்பட்ட நிலையில் ரூ.200 ஆக குறைந்துள்ளது. முல்லை விலை ரூ.300யில் இருந்து ரூ.180ஆக குறைந்துள்ளது.