சென்னை: ஓணம் பண்டிகையை கொண்டாட பல ஆயிரம் மலையாள மக்கள் தங்கள் சொந்த மாநிலமான கேரளாவுக்கு செல்லும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக 7 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான ஓணம் பண்டிகை 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழும் கேரள மக்கள் பலர், தங்கள் சொந்த மாநிலத்திற்கு விமானத்தில் செல்ல விருப்பம் காட்டுகின்றனர்.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வோர் சென்னை விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். மக்கள் கூட்டம் அலைமோதும் அதே நேரம், விமான டிக்கெட் கட்டணமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வழக்கமான கட்டணம் 3,225 ரூபாய். ஆனால் தற்போதைய டிக்கெட் விலை 10,945 ரூபாயில் இருந்து 19,089 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து கொச்சிக்கு செல்ல வழக்கமான கட்டணம் 2,962 ரூபாய். ஆனால் தற்போது டிக்கெட் விலை 6,361 ரூபாயில் இருந்து 10,243 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று கோழிக்கோடு செல்வதற்கான டிக்கெட் விலை 3,148 ரூபாயாக இருந்தது. தற்போது குறைந்தபட்சம் 5,914 ரூபாயில் இருந்து 21,228 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்ணூருக்கு செல்ல வழக்கமான கட்டணம் 3,351 ரூபாயாக இருக்கும் நிலையில், தற்போது குறைந்தபட்சம் 7,292 ரூபாய் முதல் 13,814 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.