*கேரள வியாபாரிகள் வருகை; விற்பனை பல மடங்கு விறுவிறுப்பு
பொள்ளாச்சி : ஓணம் பண்டிகை எதிரொலியாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று, பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும், கூடுதல் விலைக்கு விற்பனையானது. மேலும் கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விற்பனை பல மடங்கு விறுவிறுப்பானது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தேர்நிலை பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி, மடத்துக்குளம், உடுமலை, கணியூர், நிலக்கோட்டை, கரூர், பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நாமக்கல், மதுரை, தேனி, பாவூர் சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பூக்கள் அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன.
மேலும் ஊட்டி பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரோஜா பூ விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் அவ்வப்போது பெய்த மழையால், அந்நேரத்தில் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்தது. அதன் பின்னர், இந்த நடப்பு மாதம் துவக்கத்திலிருந்து கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், வெளியூர்களிலிருந்து பூக்கள் வரத்தும் அதிகரித்தது.
அதிலும், ஆடி மாதம் நிறைவடைந்து கடந்த வாரம் முதல் அடுத்தடுத்து முகூர்த்த நாள் இருந்ததால், அச்சமயத்தில் அனைத்து ரக பூக்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (29ம் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் நேற்று உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மார்க்கெட்டுக்கு அதிகளவில் பூக்கள் கொண்டு வரப்பட்டது. இதில் அதிகப்படியாக செண்டுமல்லி, செவ்வந்தி டன் கணக்கில் குவித்து போடப்பட்டிருந்தது. ஓணத்தை முன்னிட்டு, உள்ளூர் பகுதி வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, கோரளா வியாபாரிகளும் மொத்த விலைக்கு அதிகளவு வாங்கி சென்றனர்.
இதனால் பூக்களின் விற்பனை விறுவிறுப்புடன் காணப்பட்டது. பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும், நேற்றைய நிலவரப்படி 1 கிலோ மல்லிகை ரூ.1200க்கும், முல்லை ரூ.850க்கும், ஜாதி முல்லை ரூ.850க்கும், செண்டுமல்லி ரூ.300க்கும், செவ்வந்தி ரூ.250க்கும், கோழிக்கொண்டை ரூ.90க்கும், மரிக்கொளுந்து ரூ.30க்கும், அரளி ரூ.300க்கும், சில்லிரோஸ் ரூ.200க்கும் என, கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.