ஏர்வாடி: ஏர்வாடி- நாங்குநேரி சாலையில் வீராங்குளம் புதிய பாலத்தின் இணைப்பு பகுதி உயரம் தாழ்வாக இருப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் அச்சத்தில் தவிக்கும் வாகன ஓட்டிகள் விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வள்ளியூரில் இருந்து நெல்லைக்கு செல்வதற்கு நாங்குநேரி வழியாகவும் ஏர்வாடி வழியாகவும் பேருந்து மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன இதில் கடந்தாண்டு ஏற்பட்ட சூறைக்காற்றுடன் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் வீராங்குளம் குளம் உடையும் சூழ்நிலை ஏற்பட்டது. ஊருக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஊர் மக்கள் ஏர்வாடி நாங்குநேரிசாலையை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர்.
இதனால் ஏர்வாடி நாங்குநேரி சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு நாங்குநேரி நெடுஞ்சாலைத் துறையினர் போர்க்கால அடிப்படையில் உடனடியாகபுதிய உயரமான பாலத்தை அமைத்தனர். ஆனால் பாலத்தின் கீழ்புறம் உள்ள இணைப்பு பகுதி உயரம் குறைவாக காணப்படுகிறது. இதனால் ஏர்வாடியில் இருந்து நாங்குநேரி நோக்கி செல்லும் வாகனங்கள் பாலத்தை கடக்கும் போது திரைப்படங்களில் வருவது போல் பாய்ந்து செல்கின்றது . இதனால் பேருந்து மற்றும் கார்களில் பின் சீட்டில் இருப்பவர்கள் முதுகு மற்றும் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது மேலும் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் தள்ளாடி சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு செல்கின்றன.
எனவே, மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வதோடு பாலத்தின் இணைப்பின் உயரத்தை சீரமைக்க முன்வர வேண்டும் என அச்சத்தில் தவிக்கும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.