திருச்சி: திருச்சி அருகே ஆம்னி பஸ்கள்-லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னிபஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணியளவில் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது செட்டியப்பட்டி கோரையாற்று பால சுவரின் மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. அந்த பஸ்சை பின் தொடர்ந்து வந்த இரண்டு ஆம்னி பஸ்கள், ஒரு லாரி ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆம்னி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் இரண்டு டிரைவர்கள் உள்பட 7 பேர் திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததாலும், பலத்த மழை பெய்ததாலும் இருட்டில் சரியாக பார்க்க முடியாமல் பாலத்தின் மீது ஆம்னி பஸ் மோதியதும், பின்னால் வந்த பஸ்கள் மற்றும் லாரியும் விபத்துக்குள்ளான ஆம்னி பஸ் மீது மோதியதும் தெரியவந்தது.