சென்னை: ஆம்னி பேருந்துகள் இன்று மாலை 6 மணி முதல் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை அதிக கட்டணம் வசூலித்ததாக சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு; இன்றுடன் விடுமுறை நிறைவடையும் நிலையில், இந்த அறிவிப்பால் சொந்த ஊர் திரும்புவோர் அவதியடையும் சூழல் உருவாகியுள்ளது. வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்றுடன் விடுமுறை முடிவடையும் நிலையில் அனைவரும் சென்னை திரும்ப தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிக கட்டண வசூல் எனக்கூறி சிறை பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும் பயணிகளை பாதிக்காத வண்ணம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப 1 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளநிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகளில் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.