சென்னை: சென்னையில் இருந்து முக்கிய நகரங்களான மதுரை, கோவை, நெல்லை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு செல்ல கட்டணம் நிர்ணயம் செய்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய தொடர் விடுமுறையை அடுத்து ஏராளமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். இதற்கிடையே ஆம்னி பேருந்துகளில் மிக அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட 120 பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறை பிடித்தனர். மேலும் 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பேருந்துகளை பறிமுதல் செய்ததை கண்டித்து நேற்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பினர் அறிவித்தனர். பின்னர் கே.கே நகரில் உள்ள வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் இணை போக்குவரத்து ஆணையர் முத்து தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு அரசுடன் கலந்து பேசி வெளியிடப்பட்ட டிக்கெட் கட்டணத்திற்கும் குறைவாகவே ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் வழங்குவதாக கூறினர். இந்நிலையில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினரின் அதிகாரப்பூர்வ கட்டண விவரத்தை அறிவித்துள்ளனர். அதன்படி சென்னை-திருச்சி குறைந்தபட்ச கட்டணம் ரூ.1610 அதிகபட்ச கட்டணம் ரூ.2,430, சென்னை-மதுரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.1930 அதிகபட்ச கட்டணம் ரூ.3,070. சென்னை கோவை குறைந்தபட்ச கட்டணம் ரூ.2050, அதிகபட்ச கட்டணம் ரூ.3,310, சென்னை-நெல்லை குறைந்தபட்ச கட்டணம் ரூ.2380 அதிகபட்ச கட்டணம் ரூ.3,920, சென்னை, தூத்துக்குடி குறைந்தபட்ச கட்டணம் ரூ.2320, அதிகபட்ச கட்டணம் ரூ. 3810 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,610, அதிகபட்ச கட்டணம் ரூ.4,340, சென்னையில் இருந்து சேலத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,650, அதிகபட்ச கட்டணம் ரூ.2500 என தெரிவித்துள்ளனர். தீபாவளி நாளிலும் இதன் அடிப்படையில் தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.