சென்னை: கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 79. தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் சென்று சிகிச்சை பெற்றார். அதன்பிறகு பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4:25 மணியளவில் உம்மன் சாண்டியின் உயிர் பிரிந்தது.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று உம்மன் சாண்டி உடலுக்கு மரியாதை செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும் பல அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி,
மல்லிகர்ஜுன கார்கே: உம்மன் சாண்டியின் அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமை கேரளாவின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மட்டுமல்லாது மாநில அரசியலில் புதிய முத்திரையை பதித்தது. அவருடைய சேவைக்காக என்றும் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி: உம்மன் சாண்டி ஒரு முன்மாதிரியான காங்கிரஸ் தலைவர். அவர் ஆற்றிய பணிக்காக மக்களால் என்றும் நினைவுகூரப்படுவார் என்று ட்வீட் செய்துள்ளார்.
வாசன்: உம்மன் சாண்டி இழப்பு கேரள மக்களுக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்திற்கும் பேரிழப்பாகும் என வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி: காங்கிரஸ் மீது மிகுந்த பற்று கொண்டு கட்டுப்பாடு மிக்க சிப்பாயாக மக்கள் தொண்டராக பணியாற்றியவர் என்று கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
வைகோ: சிறந்த பண்பாளரை இழந்து வாடும் உம்மன் சாண்டி குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்திருக்கிறார். உம்மன் சாண்டி கட்சிகள் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சிக்கும் கேரளாவுக்கும் ஆற்றிய சேவைக்காக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார் என தன் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.