சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருந்து வாங்குவது போல் நடித்து, நோயாளியிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையை சேர்ந்தவர் சுகுணா (49). இவர் கடந்த 19ம் தேதி முதல் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை எலும்பு முறிவு பிரிவில் உள்நோயாளியாக உள்ள தனது மாமனார் உடன் இருந்து கவனித்து வருகிறார். கடந்த 9ம் தேதி மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் சுகுணா மருந்து வாங்க சென்றார். அப்போது அவருக்கு பின்னால் நின்று இருந்த வாலிபர், சுகுணாவின் பையில் வைத்திருந்த செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சுகுணா திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்திய போது, பெரம்பூர் வடக்கு மாதவரம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய யாக்கூப் பாஷா (34) என தெரியவந்தது. இவர், அரசு மருத்துவமனையில் நோயாளிகள் போல் அனைத்து வார்டுகளிலும் சென்று, தனியாக இருக்கும் நோயாளிகளிடம் தொடர் செல்போன் மற்றும் பணம் திருடி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் யாக்கூப் பாஷாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.