பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வந்த 33வது ஒலிம்பிக் போட்டி, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் இனிதே நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ம் ஆண்டு நடைபெற உள்ளது. 34வது ஒலிம்பிக் போட்டியின்ன் தொடக்க விழா ஜூலை 14ம் தேதியும், நிறைவு விழா ஜூலை 30ம் தேதியும் நடைபெறும். இதைத் தொடர்ந்து, பாரா ஒலிம்பிக் போட்டி 2028 ஆகஸ்ட் 15 முதல் 27 வரை நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் 3வது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு ஏற்கனவே 1932 மற்றும் 1984ல் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளன. 2028 ஒலிம்பிக் போட்டிக்காக புதிய ஸ்டேடியங்கள் எதுவும் கட்டப்படாது.
எல்ஏ கேலக்சி கால்பந்து அணியின் உள்ளூர் அரங்கம் மற்றும் எல்ஏ மெமோரியல் கொலிசியம் உள்பட லாஸ் ஏஞ்சல்சில் உள்ள 12 விளையாட்டு அரங்குகள் ஒலிம்பிக் போட்டிக்கு பயன்படுத்தப்பட உள்ளன. பீச் வாலிபால் போட்டி கடற்கரையிலேயே நடத்தப்படும். கலிபோர்னியா பல்கலை. வளாக மாணவர் விடுதி… வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கான ‘ஒலிம்பிக் கிராமம்’ ஆக மாற்றப்படும். அங்கு விரிவான, அதிநவீன பயிற்சி வசதிகளும் செய்யப்பட உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ‘கார்கள் இல்லாத ஒலிம்பிக்’ போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளனர். எனினும், ஒலிம்பிக் நிர்வாகத்துக்கு இது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட், ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர வழிவகுக்கும்.
* லேக்ரோஸ்ஸி, பேஸ்பால்/சாஃப்ட்பால், கொடி கால்பந்து போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்த பிரேக்கிங் (பிரேக் டான்ஸ்) போட்டி கைவிடப்பட்டுள்ளது. அமெரிக்க வீதிகளில் சர்வசாதாரணமாக பிரேக் டான்ஸ் ஆடும் இளைஞர்கள் இந்த முடிவால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
* அலைச்சறுக்கு, ஸ்கேட்போர்டிங், ஸ்போர்ட் கிளைம்பிங் போட்டிகள் தக்கவைக்கப்பட்டுள்ளன.
* பாராலிம்பிக் போட்டியில் ‘பாராகிளைம்பிங்’ என்ற 50 அடி சுவர் ஏறும் போட்டி அறிமுகமாகிறது.
* பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா, பாரிஸ் ஸ்டேடியத்தில் நேற்று அதிகாலை நடைபெற்றது. நிறைவு விழாவில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் தங்கள் தேசியக் கொடியுடன் மைதானத்தை சுற்றி வட்ட வடிவில் அணிவகுத்து நிற்கின்றனர்.
* பிரதமர் மோடி பாராட்டு
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய குழுவினரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது குறித்து தனது X வலைத்தள பக்கத்தில் அவர் பதிந்துள்ள தகவலில், ‘பாரிஸ் ஒலிம்பிக் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் பங்கேற்ற ஒட்டுமொத்த இந்தியக் குழுவினருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருமே தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்தி போட்டியிட்டனர். இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமை அடைகின்றனர். அடுத்து வரும் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* வினேஷ் போகத் மேல்முறையீடு தீர்ப்பு இன்று வெளியாகிறது
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் பங்கேற்க இருந்த நிலையில், உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்ததாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். சரியான எடையுடன் களமிறங்கி ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி என தொடர்ச்சியாக 3 வெற்றிகளை அவர் வசப்படுத்தி இருந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த முடிவை எதிர்த்து வினேஷ் சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பாக விளையாட்டு போட்டிகளுக்கான நடுவர் நீதிமன்றம் கடந்த 10ம் தேதி விசாரணை நடத்தியது. 3 மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் அனபெல் பென்னெட் நடத்திய விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வினேஷ் மேல்முறையீடு மீதான தீர்ப்பு இன்று இரவு 9.30க்கு வெளியாகிறது. வினேஷுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆக உயரும்.
* மல்யுத்தம், குத்துச்சண்டை, பளுதூக்குதல் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களின் உடல் எடையை பராமரிக்கும் பொறுப்பு அவர்களையே சேரும். கூடுதல் எடை சர்ச்சை தொடர்பாக டாக்டர் தின்ஷா பர்டிவாலா தலைமையிலான மருத்துவக் குழுவினரை குறை கூறுவது சரியல்ல’ என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.