மன்னார்குடி: மூதாட்டியை அடித்து படுகொலை செய்த அதிமுக ஐடி விங்க் நிர்வாகியும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வெட்டிக்காட்டை சேர்ந்தவர் ஆனந்தபாபு (32). திருவாரூர் மாவட்ட அதிமுக ஐடி விங்க் இணை செயலாளர். இவரது தாய் மலர்க்கொடி (70). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துலட்சுமி (85). இவரது மகன் சொல்லின்செல்வன். மாற்றுத்திறனாளியான இவர் தஞ்சையில் வசித்து வருகிறார். கணவர் இறந்து விட்டதால் வீட்டில் முத்துலட்சுமி தனியாக வசித்து வந்தார்.
முத்துலட்சுமி வீட்டின் கொல்லைப்புறத்தில் மலர்க்கொடி வளர்த்து வரும் ஆடு, மாடுகள் அடிக்கடி மேய்ந்து வந்தது. இதனால் மலர்க்கொடியை அடிக்கடி ஜாடையாக முத்துலட்சுமி திட்டி வந்துள்ளார். கடந்த 24ம்தேதி ஆடு, மாடுகள் மேய்ந்ததால் மீண்டும் முத்துலட்சுமி திட்டியுள்ளார். இதனை மலர்க்கொடி தட்டி கேட்டுள்ளார். இதனால் இருதரப்பிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் ஆனந்தபாபு தாக்கியதில் முத்துலட்சுமி தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் காலை வெகுநேரமாகியும் அவர் எழவில்லை. உறவினர்கள் அவரை எழுப்ப முயற்சித்தபோது அவரின் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதை அறிந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அழைத்து செல்வதற்காக, ஆம்புலன்சை அழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்சில் ஏற்றிய பின்னர் அவர் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து வடுவூர் போலீசார் கொலை வழக்கு பதிந்து ஆனந்தபாபுவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் தொடர் விசாரணை நடத்தி நேற்று மதியம் ஆனந்தபாபுவின் தாய் மலர்க்கொடியையும் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மற்றும் நடிகைகளுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக அதிமுக ஐடி விங் மாநில துணை செயலாளராக இருந்த பிரசாத் கைது செய்யப்பட்டார். தற்போது மூதாட்டியை கொன்ற மற்றொரு அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் குற்ற வழக்குகளில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* அதிமுகவில் இருந்து நீக்கம்: எடப்பாடி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சி.ஆனந்தபாபு, ( திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.