காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட தலைநகரங்களில் பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ- ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நேற்று தாலுகா அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் கதிரவன், மருதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதோபோல், செங்கல்பட்டில் ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே 10ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 1.4.2003க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். 2021 கால வரையறையின் முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். மேலும், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும்.
உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக உயர்த்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி. வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள். செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச குறைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில், மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள் நிறைவு செய்து பேசினார்.