சென்னை: வேளச்சேரி, தரமணி 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில், 60 வயது ஆண் ஒருவருடன் தங்கி இருந்த 27 வயது இளம்பெண், நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக வேளச்சேரி காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, இளம்பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த முதியவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஜோதி (60) என்பதும், வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிகலா (50) என்பவருடன் பழகி வந்துள்ளதும் விசாரணையில் தெரிந்தது. இதனிடையே, சசிகலா இறந்த நிலையில், அவரது 2வது மகள் ரம்யா (27) என்பவர், கணவனை பிரிந்து, தாய் வீட்டிற்கு வந்து இருந்துள்ளார். அப்போது, முதியவர் ஜோதிக்கு, ரம்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருவரும், வேளச்சேரியில் விடுதிக்கு வந்து அறை எடுத்து தங்கி உள்ளனர்.
ரம்யாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதனால், 6 பீர் பாட்டில்களை வாங்கி, அதில் ரம்யா 4 பீர்களை குடித்து தீர்த்துள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் ரம்யா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார். டாக்டரிடம் செல்லலாமா என கேட்டதற்கு, வேண்டாம் என கூறிவிட்டாராம். நேற்று காலை மீதம் இருந்த 2 பீர் பாட்டில்களையும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு ரம்யா இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், தொடர்ந்து முதியவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யா, நெஞ்சுமுட்ட பீர் குடித்ததால் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.