தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (65). இவர், கடந்த 2.2.2020 அன்று காலை அங்குள்ள பருத்தி காட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த கூலி தொழிலாளி மாவீரன் என்ற கர்ம முனீஸ்வரன் (33) அவரை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த தங்க கம்மல்களை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து மாவீரன் என்ற கர்ம முனீஸ்வரனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்தது. நீதிபதி மாதவ ராமனுஜம் வழக்கை விசாரித்து, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனையும், பாலியல் பலாத்காரத்திற்கு 20 ஆண்டுகள் சிறையும், நகைகளை பறித்ததற்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு நேற்று தீர்ப்பளித்தார்.