திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பணியில் சேர்ந்த ஒன்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டுந்தது.
அப்போதைய ஒன்றிய அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தை மாநில அரசுகளும் பின்பற்றி நடைமுறைபடுத்தின. தமிழ் நாட்டில் 2003ம் ஆண்டே அப்போதைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைபடுத்தியது.
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதியத்திட்டத்தையே மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு ஊழியர்களும் மாநில அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் பழைய ஓய்வூதியத்தை தொடர்ந்து நடைமுறைபடுத்தி வந்த சூழ்நிலையில், தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்தியது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களை போன்று மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் கோரிக்கை விடுத்துள்ளார்.