டெல்லி : ஓலா, உபர் உள்ளிட்ட டாக்சி சேவை நிறுவனங்கள் அடிப்படை கட்டணத்தில் இருந்து 2 மடங்கு வரை அதிக கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஓலா, உபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ரெபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினம்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாடகை வாகன நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் ஓலா, உபர் நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான உச்சவரம்பு 1.5 மடங்கில் இருந்து 2 மடங்காக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான காரணமின்றி, பயணத்தை ஓட்டுனர்கள் ரத்து செய்தால், அவர்களிடம் இருந்து அதிகபட்சம் ரூ.100 அபராதமும் சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே போல் ரூ.100 வரை அபராத கட்டணம் வசூலிக்கவும் ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.