சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: ஜுலை 1 ம் தேதி முதல் யூனிட்டுக்கு 41 காசுகள் மின் கட்டண உயர்வு என்பது வணிகர் மற்றும் பொதுமக்களுக்கு பெரும்சுமையாக மாறுவதை தவிர்க்க முடியாது என்பதை அரசு கவனத்தில் கொண்டு, தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வினை மறுபரிசீலனை செய்து ரத்து செய்திட வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகின்றது.
ஒன்றிய அரசு ஓலா, ஊபர் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வரி செலுத்தும் சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாகவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டண உயர்வினை உயர்த்திக்கொள்ள அனுமதித்திருப்பது பொதுமக்கள் நலனுக்கு எதிரானது என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பதிவு செய்கின்றது.
ஏற்கனவே கட்டணக் கொள்ளை என பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்ற நிலையில், பீக் அவர்ஸ் கட்டண உயர்வு 2 மடங்காக உயர்த்திகொள்ள அறிவித்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை ஒன்றிய, மாநில அரசு கவனத்தில் கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்துள்ள கட்டண உயர்வு அனுமதியை திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.