மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வந்தது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஒகேனக்கல்லுக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஐவர்பாணி, மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று முதல் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
இதேபோல் மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து 16,500 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 21,500 கனஅடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.