திருவள்ளூர்: ஆயில்மில் பகுதியில் இருந்து பெரியகுப்பம் வரை ₹17 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியனில் மின்விளக்கு அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மன்றக் கூடத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகரமன்றத்தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், பொறியாளர் நடராஜன், மேலாளர் சந்திரிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், சுமித்ரா வெங்கடேசன், நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர், பிரபாகரன், சாந்தி கோபி, அயூப் அலி, பாபு, ஜான், ராஜ்குமார் (எ) தாமஸ், பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், சீனிவாசன், ஹேமலதா, விஜயகுமார், கந்தசாமி, கமலி மணிகண்டன், ஆனந்தி சந்திரசேகர், செந்தில்குமார், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி சீனிவாசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்ததற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆயில்மில் பகுதியில் இருந்து பெரிய குப்பம் வரை கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ₹17 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியனில் மின்விளக்கு அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.