Saturday, July 19, 2025
Home மகளிர்சிறப்பு கட்டுரைகள் அஞ்சு வண்ணப்பூவே…

அஞ்சு வண்ணப்பூவே…

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

மாற்றுத்திறனாளியாய் பிறந்தவர்கள் படிப்பதும், வேலைக்குச் செல்வதும் சாத்தியமா என்றால்? இதற்காக அவர்கள் நிறையவே பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது. அப்படியே படித்து முடித்து வேலை வாய்ப்பை பெற்றாலும், திருமணத்தில் தடைபட்டு நிற்பார்கள். இதையெல்லாம் தாண்டி தனக்கான துணையை தேர்ந்தெடுப்பதும், எல்லோரையும்போல் இயல்பான வாழ்க்கையை நானும் வாழணும்டா என துணிவதும் வெகுசிலரே. அப்படியான வெற்றிப் படிக்கட்டில் ஏறி நிற்பவர்தான் நேத்ரா ஈஸ்வரன்.

ஆம்! பிறக்கும்போதே ஸ்பைனா பிஃபிடா (spina bifida) எனப்படும் முதுகுத் தண்டுவட பாதிப்பில் பிறந்தவர் நேத்ரா. அதாவது, கரு வளர்ச்சியில் முதுகுத் தண்டுவடம் உருவாகும்போது, தண்டுவடத்தின் அடிப்பகுதி தானாகவே மூடும். ஒருசில குழந்தைக்கு மூடாமல் நரம்புகள் சில திரவத்தை (fluid) வெளியேற்றி கட்டியாக மாற்றும். நரம்பு தொடர்பில் உள்ள உடல் பாகம் வலுவிழக்கும். அறுவை சிகிச்சை செய்தாலும் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகள் இருக்காது.

கால்களும் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க, பிறகு நடக்க முடியாமலே போகிறது. மூளையில் இருந்து முதுகுத் தண்டுவடத்துக்கு வரும் சிக்னல் தவறுவதால், இயற்கை உபாதைகளை வெளியேற்றுவதிலும் மிஸ்கம்யூனிகேஷன் ஏற்படும் எனப் பிரச்னைகளைச் சுருக்கமாய் சொன்ன நேத்ரா, சென்னையில் செயல்படுகிற வெளிநாட்டு வங்கி ஒன்றின் சீனியர் அனலிஸ்ட். அப்படியே ஜாவ்ளின் த்ரோ, டிஸ்க் த்ரோ என மாவட்ட அளவில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், மாநில அளவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்று வெற்றிக் கோப்பைகளோடு தேசிய பாரா ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீராங்கனையாக வலம் வருபவர்.

மிகச் சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நேத்ராவுக்கும் கேரள மாநிலத்தின் பத்மசங்கர் என்கிற ஆதித்யாவிற்கும் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் டிரெடிஷனலாக நடைபெற, இருவரையும் சந்தித்ததில்… ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைதான் எனக்கு ஊர். வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. தவழும் மாற்றுத் திறனாளியாகத்தான் தொடக்கத்தில் இருந்தேன். எப்படியாவது என்னைப் படிக்க வைக்கும் முயற்சியில் பெற்றோர் எனக்கு நிழலாக மாறினர்.

அறுவை சிகிச்சை, ஆயுர்வேதம், பிஸியோதெரபி என சிகிச்சை எடுத்து, காலிஃபர் அணிந்து மெதுவாக நடக்கத் தொடங்கினேன். அம்மா பால்வாடி ஆசிரியர் என்பதால் மருத்துவமனையில் இருக்கும் நேரத்திலும், எழுதவும் படிக்கவும் எனக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்பா பள்ளிக்கூட பெஞ்ச் வரை கொண்டு வந்து என்னை உட்கார வைத்துவிட்டுதான் வேலைக்கு செல்வார்.

நான் படித்தது கிறிஸ்துவ மிஷினரி பள்ளி என்பதால், பத்தாம் வகுப்புவரை தரை தளத்தில் உள்ள வகுப்பறையிலே எனக்காக வகுப்புகள் நடந்தது. பத்தாம் வகுப்புத் தேர்வையும் அதே அறையில்தான் எழுதினேன். அந்தளவு ஆசிரியர்கள் நான் படிப்பதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். பத்தாம் வகுப்புவரை மட்டுமே அங்கு இருந்ததால், +2 படிக்க அரசுப் பள்ளிக்கு போக வேண்டிய நிலை. அரசுப் பள்ளிகள் வீல்சேர் ஃப்ரெண்ட்லியாக இருக்காது என்பதால், மிகப்பெரிய மனப் போராட்டம் இருந்தது.

ஆனாலும், கல்விதான் முக்கியம் என பெற்றோர் அரசுப் பள்ளியில் சேர்க்க, எங்கள் ஊரில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளி ஒன்றின் துணை முதல்வர் தானாக முன்வந்து, அவர் பள்ளியில் படிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்.அவரின் முன்னெடுப்பில் +1, +2 வகுப்புகள் எனக்காக தரை தளத்திற்கே மாற்றப்பட்டது. +2 முடித்ததும், சென்னை எம்ஐடியில் இஞ்சினியரிங் சீட் கிடைத்தும், எனது நிலை மற்றும் பொருளாதார நிலையால் சேர முடியவில்லை. ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்ததில், பக்கத்து ஊரான கிருஷ்ணகிரியில் கிடைத்தது. அங்கேயே சின்ன அறையை வாடகைக்கு எடுத்து, வாரம் முழுவதும் அப்பா, பாட்டியோடும், வார இறுதியில் அம்மாவுடனும் இருந்து படிக்க ஆரம்பித்தேன்.

பயிற்சி முடித்து, அரசு வேலைக்கான டெட் தேர்வெழுதியதில் ஒரு மதிப்பெண்ணில் வாய்ப்பு தவறியது. மாலை நேர டியூசன், கிராஃப்ட் வேலைகள், த்ரெட் ஜூவல்லரி மேக்கிங், க்யுல்லிங் வொர்க் இவற்றோடு, நேத்தூஸ் என்ற ஆன்லைன் வணிக பக்கத்தை உருவாக்கி விற்பனையை தொடங்கியதில் கொஞ்சம் கிளிக்கானது. கிடைத்த வருமானத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ. ஆங்கிலம் முடித்து, மீண்டும் ரெகுலரில் பி.எட். இணைந்து அப்பாவோடு தங்கி படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து எம்.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சரையும் அஞ்சல் வழியாக முடித்தேன்.

அம்மா, அப்பா இருவரும் எனக்காக செய்த தியாகங்களை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாதபடி தங்களையே வருத்திக் கொண்டவர்கள். அம்மா தான்படும் கஷ்டங்களை மறைத்து தினமும் 15 கிலோ மீட்டர் மேட்டிலும், பள்ளத்திலும் காலையும் மாலையும் ஏறி இறங்கி எனக்காகவே நடந்தவர். அப்பாவோ எனது படிப்பிற்காக, பார்த்த வேலைகளில் நிரந்தரமாய் இருக்க முடியாமல் என்னைத் தூக்கி சுமந்தவர்.சரியான வயதில் பெற்றோர் படிப்பை கொடுக்கவில்லையெனில் நான் முடங்கியிருப்பேன். அதேபோல் சோஷியல் மீடியா என்ற ஒன்று இல்லையெனில், தொடர்புகள் கிடைக்காமலே போயிருக்கும்.

எனக்கான லிங்டின் பக்கத்தை உருவாக்கி என்னைப் பற்றிய தகவல்களை அப்டேட் செய்ததுடன், கூடவே ஃபேஸ்புக், இன்ஸ்டா பக்கத்தில் நட்புகளை உருவாக்கி, வாய்ப்புகளைத் தேடத் தொடங்கி, சில நிறுவனங்களின் தொலைபேசி எண்களையும் தேடிப்பிடித்து பேசியதில், மாற்றுத்திறனாளி என்றதுமே நிராகரிக்கப்படுவேன். அஞ்சல் வழியாக டிகிரி முடித்தேன் என்றால் நிராகரிப்பு கூடுதலாகும்.

தொடர் முயற்சியால் பெங்களூருவின் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வாய்ப்பு கிடைக்க, கடைசிவரை எல்லா ரவுண்டிலும் தேர்வாகியும், மாற்றுத்திறனாளி என்ற பாயிண்டில் வாய்ப்பு நழுவ இருந்ததை, முக்கிய அதிகாரி முன்னெடுப்பில் வாய்ப்பு கிடைத்தது. வேலைக்கு சென்றுவர அலுவலகத்தில் கேப் வசதியும் கூடவே வீல்சேர் வசதியும் இருந்தது. எனவே, பிரச்னை இல்லாமல் செல்ல, வேலையில் இணைந்த எட்டே மாதத்தில் பெஸ்ட் எம்ப்ளாயிக்கான விருதும் பெற்றேன்.இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், சென்னைக்கு வேலையை மாற்ற முடிவெடுத்தேன். காரணம், தமிழக அரசு பேராஸ்போர்ட்ஸ் பயிற்சிக்கான உபகரணம், ஊக்கத் தொகை என மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் பல செய்வதுடன், எங்கள் நலனிலும் அக்கறை காட்டுவதால், விளையாட்டிலும் சாதிக்க முடிவெடுத்தேன். இங்கு வந்தபிறகு டப்பிங் குரலுக்கான சான்றிதழ் படிப்பையும் முடித்தேன்.

சென்னை வந்தபிறகே என் வாழ்க்கைக்குள் ஆதித்யா நுழைந்தார். காதலை என்னிடம் வெளிப்படுத்தாமலே அக்கறை காட்டியவருக்கு என்னைப் பிடிச்சிருக்கு என பழகும்போதே புரிந்தது. கலகலவென இருந்தவர் திடீரென மௌனமானார். காரணம், அன்பை நாம கொடுக்க கொடுக்க அதில் ஃபீலாகி, திருமணத்தில் இது முடியவில்லையெனில், நான் ஹர்டாகிவிடக்கூடாது என யோசித்திருக்கிறார்.முதன் முதலாக என் பிறந்த நாளில் பீனிக்ஸ் மாலில் சந்திக்க முடிவானது. வருகிற இளைஞர்கள் முகத்தில் எல்லாம் ஆதியை தேடி… மாலின் நுழைவுவாயிலில் வீல்சேரில் காத்திருக்க… என்னை நேரில் பார்த்ததும் ஆதியின் மனசு மாறிவிடுமே என்றெல்லாம் யோசிக்கிறேன். ஆனால், எனக்குப் பின்னால் மெதுவாய் வந்த ஆதி, எனது வீல்சேரை முன்னோக்கி மெதுவாகத் தள்ளி நடக்க ஆரம்பிக்க, அந்த மொமென்ட் எனக்கு ஆதி மீது நம்பிக்கை வந்தது.

என்னைப் பிடிச்சிருக்குன்னு ஆதி சொன்னதுமே… நான் கேட்ட முதல் கேள்வி, அவர் பெற்றோர் பற்றிதான். ‘கண்டிப்பா என் அம்மா ஒத்துக்குவாங்க’ என நம்பிக்கையாக அதேநேரம் அழுத்தமாகவே சொன்னார்’’ என ஆதியை பார்க்க… தொடர்ந்தார் ஆதித்யா.‘‘இது இயல்பான திருமணம் இல்லை. திருமணத்தை செய்து கொள்ளப் போவதும் சுலபமான விஷயமில்லை. நேத்ராவை கையாளும் பொறுமை இருக்கா என்பதில் நான் தெளிவாகி, பிறகு விருப்பத்தை தெரிவிக்கலாம் என மௌனம் காத்தேன்’’ என்ற ஆதிக்கு கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஊர். விஷூவல் கம்யூனிகேஷன் முடித்து, ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபராய் இருந்தவரின் முகநூல் நட்பில் நுழைந்தவர்தான் நேத்ரா.

‘‘தொடக்கத்தில் இருந்தே நேத்ராவை வீல்சேர் யூசர் என்ற கண்ணோட்டத்தில் நான் பார்க்கவே இல்லை. என் நண்பர்கள் யாராக இருந்தாலும் அம்மாவுக்கும் அறிமுகப்படுத்தி பேச வைப்பேன். நேத்ராவையும் அப்படியே! நேத்ரா வீல்சேர் யூசர் என அம்மாவுக்கு ஆரம்பத்திலே தெரியும். நேத்ராவிடமிருந்து அடிக்கடி அழைப்பு வருவதைப் பார்த்த அம்மாவுக்கு ஓரளவுக்கு புரிந்தது. நான் என் விருப்பத்தைச் சொன்னபோது, “வேலைக்குப் போயிக்கொண்டே நேத்ராவையும் உன்னால் பார்த்துக்க முடியுமா” என்று மட்டுமே கேட்டார். பிறகு அம்மாவும் அப்பாவும் என் விருப்பத்தை மதித்தார்கள். நாளை திருமணத்தில் நேத்ராவைப் பார்த்து யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதில் அம்மா தெளிவாகவே இருந்தார்’’ என்ற ஆதியை ஆச்சரியத்தோடு நாம் பார்க்க, நேத்ரா தொடர்ந்தார்.

‘‘பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் வரை எங்களுக்கு எல்லாமே டிரெடிஷனலாக நடந்தது. பெண் பார்க்க வந்த ஆதியின் அம்மா என் பெற்றோரிடம், “நேத்ராவை நேரில் பார்க்கணும்னு நீங்க சொன்னதால்தான் வந்தோம். இல்லைனா நேத்ரா எங்களுக்கு ஓ.கே.” என சொன்னார் என்றபோது, நமக்கோ காதலுக்கு மரியாதை வித்யா கேரக்டர் நினைவில் வந்தது. ஆதியின் அம்மா என்னிடம், “உன் காதுபட உன்னை யார் எது சொன்னாலும் நீ காதில் போட்டுக்கக்கூடாது. நாம நால்வர் மட்டுமே நமது குடும்பம்.

நாங்கள் ஏதாவது சென்னால்தான் நீ வருத்தப்படணும். உடல் ரீதியா எத்தனையோ சிரமங்கள் உனக்கு இருந்தும், படிச்சுருக்க, வேலைக்கு போற, நிறைய சாதிக்கிற, எதில் நீ குறஞ்சுட்ட” என்றார். பிறரிடம் அறிமுகப்படுத்தும்போதும், என் சாதனைகளைச் சொல்லி பெருமைப்படுத்தி பேசியதுடன், அவர்கள் வீட்டில் எனக்காகவே கழிவறை உட்பட அனைத்து இடத்திற்கும் தடையின்றி சென்றுவர வீல்சேர் ஃப்ரெண்ட்லியாய் வீட்டை மாற்றியிருந்தார்.என் பெற்றோர் தியாகத்தை தொடர்ந்து, ஆதியின் குடும்பமும் தற்போது தியாகத்தில் பங்கெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்’’ என்ற நேத்ராவை, காதலோடு வீல்சேரில் மெதுவாய் தள்ளியபடி ஆதி நடக்க… “காற்றா வாரேன்… காப்பா வாரேன்… ஏங்காதா.!! காற்றில் கலந்து வந்து செவிகளில் ரீங்காரமிட்டது அஞ்சு வண்ணப் பூவே பாடலின் வரிகள்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi