புதுச்சேரி: புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சார் பதிவாளர் காந்த் என்பவர் பத்திரம் பதிய வந்தவரிடம் அசல் பத்திரம் இல்லை பணம் கொடுத்தால் பதிந்து தருகிறேன் எனக்கூறி ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்தை லஞ்சமாக கொடுக்க அலுவலகம் வந்துள்ளார். அப்போது சார் பதிவாளர் காந்த் அலுவலகத்தில் அனைவரும் இருப்பார்கள் என்றுக்கூறி அந்த நபரை கழிவறைக்கு வரவழைத்து ரூ.25 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கியதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கழிவறையில் ஒருவர் நின்று கொண்டு பணத்தை எண்ணி சார்பதிவாளர் காந்திடம் கொடுப்பதும், அதனை அவர் வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு திங்கள்கிழமை சரிசெய்யப்படும் என்று கூறிவிட்டு செல்வதும் பதிவாகியிருந்தது.
இச்சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்துள்ளது. சார் பதிவாளர் காந்த் குடிமைபொருள் வழங்கல் துறையில் பணிபுரிந்து கொண்டு டெபுடேஷன் அடிப்படையில் சார் பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த மார்ச் 6ம்தேதி இவர், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பைலேரியா துறைக்கு துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்தார். இந்த நிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி பைலேரியா துறைக்கு செல்லாமல் மாவட்ட பதிவாளர் உதவியுடன் சார் பதிவாளராகவே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் தனது அலுவலகத்தில் பணியில் இருக்கும்போது அடிக்கடி கழிவறைக்கு செல்வார் என அங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.