ஊட்டி : பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம், காந்திநகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் துணிநூல் துறை இயக்குநர் ஆகியோர் லலிதா ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ராயல்கேசில் மற்றும் கோடப்பமந்து ஆகிய அபாயகரமான பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியதாவது,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதை முன்னிட்டு குந்தா சுற்று வட்டார பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு ஆகிய பகுதிகளில் மழை பொழிவு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் குந்தா சுற்று வட்டார பகுதிகளுக்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மரங்கள் அதிகமுள்ள பகுதிகளுக்கும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்லவோ வேண்டாம்.
ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. வாகனங்களை சாலையோர மரங்களின் அடியிலோ, பராமரிப்பு இல்லாத கட்டிடங்கள் அருகிலோ நிறுத்த கூடாது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கூடுதலாக இருப்பு வைத்து கொள்ள வேண்டும். அனுமதியின்றி வனங்களுக்குள் நுழைய வேண்டாம். அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும், என்றார்.