புதுடெல்லி: சினிமா திருட்டை தடுத்து, உடனடி நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு 12 கண்காணிப்பு (நோடல்) அதிகாரிகளை நியமனம் செய்துள்ளதாக நேற்று ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருட்டு சினிமா காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு சினிமாத்துறை நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அதை சட்டப்பூர்வமாக தடுக்க எழுந்த வேண்டுகோளையொட்டி, ஒன்றிய அரசு கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சினிமாட்டோகிராப் திருத்த சட்டம்-2023 நிறைவேற்றியது. அதன்படி, தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் சென்சார் போர்டு ஆகியவற்றில் 12 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ‘யூ-டியூப், டெலிகிராம், இணையம் மற்றும் ஆன்லைன் தளங்களில் தங்கள் சினிமா திருட்டுத்தனமாக ஒளிபரப்பாவதை தயாரிப்பாளர் புகார் செய்தால் 48 மணி நேரத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். அவ்வாறு படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பு செய்தவர்களுக்கு 3 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறையும், ரூ.3 லட்சம் முதல் படத்தின் தயாரிப்பு செலவில் 5 சதவீத தொகை வரையும் அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.