திருமயம் : திருமயம் பஸ் ஸ்டாண்டில் பூட்டி கிடக்கும் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பொது போக்குவரத்தை வழங்கி வருகிறது. திருமயம் வழியாக காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பெரு நகரங்கள், பொன்னமராவதி, ராயவரம், அரிமளம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் திருமயம் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பஸ் ஏற திருமயம் பஸ் ஸ்டாண்ட் வருகின்றனர்.
இதனிடையே திருமயம் பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறும் பயணிகளுக்கு வழிகாட்டவும், திருமயம் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ் வருவதை கண்காணிக்கவும், திருமயம் பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வந்தது.இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அலுவலர்கள் யாரும் நியமிக்கப்படாததால் திருமயம் பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் பூட்டி கிடக்கிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் செல்லும் நேரம், வருகை தெரியாமல் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே திருமயம் புறவழிச்சாலையாக உள்ள திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலை வழியாக அரசு, தனியார் பஸ்கள் செல்வதாகவும் இதனால் திருமயம் பயணிகளை பஸ்ஸில் ஏற்ற நடத்தினர்கள் மறுப்பதாகவும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனைப் போக்க அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருமயம் பஸ் ஸ்டாண்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தை திறந்து அலுவலர்களை நியமிப்பதன் மூலம் திருமயம் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வருவதை உறுதி செய்ய முடியும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் திருமயம் பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள போக்குவரத்து கழக அலுவலகம் முக்கிய பகுதியில் அமைந்துள்ளதால் ஊராட்சி நிர்வாகத்திற்கு வாடகை இழப்பும் ஏற்பட்டுள்ளது. பூட்டியே கிடக்கும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு எதற்கு அலுவலகம் என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் பஸ் ஸ்டாண்டில் பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை திறந்து அலுவலரை நியமித்து பயணிகளுக்கு வழிகாட்டுவதோடு, திருமயம் வழியாக வரும் அரசு, தனியார் பஸ்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.