சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. ஆய்வுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறை செயலர் செந்தில் குமார், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி, வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் மற்றும் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அடிக்கடி ஆய்வு செய்து அதன் செயல்பாட்டு திறனை உறுதி செய்து, செயல்படாத நிலையங்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அதேபோல், மணலி, எண்ணூர் பகுதியில் உடனடியாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமோனியா மற்றும் குளோரின் போன்ற ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அவ்வாறான ரசாயனங்களை பயன்படுத்தும் வழிமுறைகள் தொழிற்சாலைகளில் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
சாய தொழிற்சாலை மற்றும் தோல் தொழிற்சாலையில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் உப்பு கலவை கழிவை அப்புறப்படுத்த மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயமிடும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தென்னை நார் தொழிற்சாலைகளை கண்காணிக்க வேண்டும், சிவப்பு வகை தொழிற்சாலைகளை சீரான இடைவெளியில் கண்காணிக்க வேண்டும், மாவட்ட அலுவலங்களுக்கு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள், பிளாஸ்டிக் மற்றும் மின் கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை அதிக எண்ணிக்கையில் அமைக்க ஊக்குவிக்க வேண்டும், இதுதவிர, தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதைத் தவிர, பல்வேறு கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மேலும் பல்வேறு கழிவு மேலாண்மையின் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு இணையதளத்தில் தொழிற்சாலைகள் பதிவு செய்துள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறேன். தொழிற்சாலைகள் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியைப் பயன்படுத்தி பெருமளவில் மரங்களை வளர்க்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.