Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு சிறை காவலர்களை அமர்த்துவது குறித்து விசாரணை: உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஒரு அறையில் 60 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒரே பொது கழிவறைதான் உள்ளது. புழல் சிறையில் 203 வார்டர்கள் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களில் 60 பேர் ஒரு ஷிப்டுக்கு பணியில் இருக்க வேண்டுமென்ற விதி உள்ளது.

ஆனால், ஒரு ஷ்ப்டுக்கு 15 வார்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள வார்டர்கள் சிறைத்துறை டிஜிபி, ஐஜி உள்ளிட்ட அதிகாரிகளின் வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வு அளித்த உத்தரவில், சீருடைப் பணியாளர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தக் கூடாது என்று பலமுறை உத்தரவிட்டும் அந்த நடைமுறை தொடர்கிறது. இதனை ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை வார்டர்கள் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து உள்துறை செயலாளர் சிபிசிஐடி மற்றும் உளவுத்துறை உதவியுடன் விரிவான விசாரணையை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் காலத்து ஆர்டர்லி நடைமுறையை பின்பற்றி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது.

பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுபோல அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் காவலர்களை கண்டறிந்து சிறைப் பணிகளுக்கு மாற்ற வேண்டும். இந்த உத்தரவை மூன்று வாரங்களில் செயல்படுத்தி உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.