வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒப்பற்ற நாடு இந்தியா. இப்படி தனிச்சிறப்பு கொண்ட இந்திய நாட்டிற்கு தேசிய மொழி என்று தனியாக எதுவுமில்லை. அதேநேரத்தில் அலுவல் மொழிகளாக 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசானது சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதை அவ்வப்போது ஆதாரங்களுடன் எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்தி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜவின் முக்கியத்தலைவர்களும், ஒன்றிய அமைச்சர்களும் ஒவ்ெவாரு மாநிலத்திற்கு செல்லும் போதும், அங்குள்ள மக்களின் தாய் மொழியை வானளாவ புகழ்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நாடாளுமன்றம் தொடங்கி பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோடியின் தமிழ்பேச்சுகள் பேசு பொருளாகவும் மாறியது.
இந்தநிலையில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக்குழுவின் 38வது கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்து பேசினார். அவரது பேச்சு, இந்தியை மட்டுமே ஒன்றிய அரசு தூக்கிப்
பிடிக்கிறது என்பதை மீண்டும் அம்பலமாக்கியுள்ளது. ‘‘பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒருநாளும் ஆங்கிலத்தில் உரையாற்றியதில்லை. இந்தியில்தான் பேசியுள்ளார். நமது நாட்டைப் பொறுத்தவரை இந்தியை ஏற்றுக்ெகாள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்,’’ என்று பேசியிருப்பதே இதற்கான சாட்சியம்.
இந்திய மொழிகள் அனைத்தும் இந்தியிடம் மண்டியிட்டே ஆகவேண்டும் என்பதையே அமித்ஷாவின் பேச்சு உணர்த்துகிறது. இது பல்வேறு மொழி பேசும் மாநில மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் எப்போதும் போல் தமிழ்நாடுதான், அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கம்பீரமாக முதல் சாட்டையை வீசியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு, மற்றமொழி பேசும் மக்களை இந்திக்கு கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும்.
இதைக்கேட்டு நடக்க தமிழ்நாடு, தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல. தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்கு சென்றால் நஞ்சை பரப்புவதும் பாஜவின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தி திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித்ஷா உணரவேண்டும். 1965 மொழிப்புரட்சி காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள்,’’ என்று அவர் எச்சரித்திருப்பது பல மாநிலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கியது இந்திய துணைக்கண்டம். இங்கு ஒரு சிறுபகுதி மக்களின் மொழியான இந்தியை, பிற தேசிய இனங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதையும் முதல்வரின் பதிவு முத்தாய்ப்பாக முன்வைத்துள்ளது. இங்கே முதல்வர் குறிப்பிட்டுள்ள 1965 மொழிப்புரட்சி என்பது அன்றைய காலகட்டத்தில் இந்திய அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய எழுச்சியின் உச்சபோராட்டம். நூற்றுக்கணக்கான கட்டிளம் காளைகள், அன்னை மொழி காக்க தங்களை தீக்கிரையாக்கி மாண்டனர். அந்த உயிரோட்டமான போராட்டமும், அதன் பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும்தான், இன்றைய முன்னேற்றத்திற்கான நீரோட்டம். இதை நமது தலைமுறைகள் அறிய வேண்டியதும் இங்கே காலத்தின் அவசியம்.