*மழையில் தடயங்கள் அழிந்ததால் சிக்கல்
ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே விவசாயி கொலையான வனப்பகுதியில் தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மழையால் தடயங்கள் அழிந்ததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(53). விவசாயி. கால்நடைகளையும் பராமரித்து வருகிறார். இவரது மனைவி கற்பகவள்ளி(39). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நள்ளிரவில் கால்நடைகள் அருகே உள்ள விவசாய நிலத்தில் இறங்கி விடுவதால், அவற்றை தேவேந்திரன் காட்டுக்குள் விரட்ட சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புவது வழக்கமாம். அதேபோல், கடந்த 18ம் தேதி நள்ளிரவில் காட்டுப்பகுதிக்குள் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வனப்பகுதியில் மாடுகளை மேய்க்க சென்றவர்கள், உடலில் பலத்த காயங்களுடன் தேவேந்திரன் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து, அவரை மீட்டு கீழே கொண்டு வந்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். தலையில் பலத்த காயம் இருப்பதால் தேவேந்திரனை யாரோ அடித்து கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொலை நடந்ததாக கூறப்படும் வனப்பகுதிக்கு வேலூர் தடய அறிவியல் நிபுணர் சொக்கநாதன் தலைமையிலான நிபுணர்கள் குழுவினர் நேற்று சென்றனர். அப்போது, வனப்பகுதிக்குள் வாகனங்கள் செல்ல வழி இல்லாததால் கிராம மக்கள் உதவியுடன் சுமார் 3 கி.மீ. நடந்து சென்று சம்பவ இடத்தை அடைந்தனர். பின்னர், அப்பகுதியில் தடயங்களை சேகரிக்க தொடங்கினர்.ஆனால், நேற்று இரவு பெய்த மழையால் ரத்த கறைகள், காலடி போன்ற தடயங்கள் அழிந்து போனதால் அதனை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆய்வு செய்தபோது தேவேந்திரனின் காலணி, உடைகள் மட்டும் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து தடயவியல் நிபுணர்கள் குழுவினர் கூறுகையில், கொலை நடந்ததாக கூறப்படும் இடத்தில் அதற்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. அதேபோல், சம்பவ இடத்தில் ரத்த கறைகள், காலடி தடங்கள் மழையில் அழிந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், வனவிலங்குகள் தாக்கியதற்கான அடையாளமும் இல்லை. இங்கு கரடிகள், காட்டுப்பன்றிகள், மலைப்பாம்புகள் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு, ஏதோ ஒரு வனவிலங்கு தேவேந்திரனை துரத்தியதில் அவர் நிலை தடுமாறி விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம்? அல்லது யாரேனும் கொலை செய்யும் நோக்குடன் அடித்து இருந்தால் அவர் இறந்திருக்கலாம். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு இது கொலையா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது தெரியவரும் என்றனர்.
வனவிலங்குகள் தாக்கி இறந்தாரா?
கொல்லைமேடு பகுதியை சேர்ந்த தேவேந்திரன் தலையில் பலத்த காயங்களுடன் வனப்பகுதியில் இறந்து கிடந்தார். அவரை யாரோ அடித்து கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கிராமத்தை ஒட்டியவாறு உள்ள இந்த வனப்பகுதியில் கரடிகள், காட்டுப்பன்றிகள், மலைப்பாம்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கிராம மக்கள் வளர்த்து வரும் ஆடுகள், கோழிகள் போன்றவை அடிக்கடி மர்மமான முறையில் வனப்பகுதியில் இறந்தும் போகிறதாம். இதுவரை 10க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்மமான முறையில் இறந்ததாக கூறுகின்றனர். இதனால், தேவேந்திரனையும் ஏதோ ஒரு வனவிலங்கு தாக்கி இருக்கலாம் என்றும் ஊருக்குள் தகவல் பரவி வருகிறது.