ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் வாரச்சந்தையில் தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் நேற்று 50 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நேற்று நடந்த சந்தையில் வெறும் 50க்கும் குறைவான ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு அழைத்து வரப்பட்டது. அதிலும், பல ஆடுகளை விற்காமல் கொண்டு சென்றனர். இந்த ஏமாற்றம் வியாபாரிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரங்களில் வர்த்தகம் குறைந்தது. இருந்தாலும் ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது. ஆனால், நேற்று நடந்த சந்தை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. இதுவரை நாங்கள் யாரும் பார்த்திடாத அளவுக்கு மிக மிக குறைந்த எண்ணிக்கையில் அதுவும் 50க்கும் குறைவான ஆடுகள் விற்பனைக்கு வந்தது இதுவே முதல் முறையாகும்.
தொடர் மழை, கடும் பனிப்பொழிவு மற்றும் கார்த்திகை மாதம் போன்ற காரணங்களால் ஆடுகள் கொண்டுவரப்படவில்லை. இதனால், வியாபாரிகள் வெறும் கையோடு வீட்டிற்கு திரும்பி சென்றனர். இதனால் நேற்று நடந்த சந்தையில் ₹2 லட்சத்திற்கும் குறைவாக தான் வர்த்தகம் நடந்தது’ என கூறினர்.


