புதுடெல்லி: ‘ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்காமல், சிபிஐ விசாரணை என்பது ஒன்றிய அரசின் தோல்வியை திசை திருப்பும் ‘தலைப்புச் செய்தி’ முயற்சி’ என காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை நேற்று தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ஸ்ரீனேட் அளித்த பேட்டியில் கூறியதாவது: விபத்து நடந்து 96 மணி நேரமாகி விட்டது. ஆனால் யாரும் பொறுப்பேற்கவில்லை. சுமார் 300 பேர் இறந்த இந்த பயங்கர விபத்துக்கு என்ன காரணம் என கண்டுபிடிப்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு சதி என நாடகமாடுகிறது.
இந்த தவறுக்கு ரயில்வே அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டிய நிலையில், சிபிஐ விசாரணை, நாசவேலை என தலைப்புச் செய்திகளை உருவாக்கி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. 2016ம் ஆண்டு கான்பூர் ரயில் விபத்து குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அப்போது விசாரணை நடத்தியது. அதில் இதுவரை ஒரு ஆதாரம் கூட கிடைக்கவில்லை. பிரதமரும் ரயில்வே அமைச்சரும் விபத்து பகுதிக்கு செல்வது ஏதோ கடவுளே தோன்றியது போல கேலிக்கூத்து உருவாக்கப்படுகிறது.
2017 முதல் 2021 வரை நடந்த 10 ரயில் விபத்துகளில் ஏறக்குறைய 7 விபத்துகள் தடம் புரண்டதால் ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தை சிபிஐ கண்டுபிடிக்குமா? ரயில்வேயில் 3 லட்சம் பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன? லோகோ டிரைவர்களை 12 மணி நேரத்திற்குள் பணியமர்த்துவது ஏன்? பாதை பராமரிப்பு நிதியில் 23 சதவீதம் குறைக்கப்பட்டது ஏன்? ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டிய இந்த கேள்விகளுக்கான பதிலை சிபிஐ கண்டுபிடிக்குமா? இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தது ஒன்றிய பாஜ அரசு செய்த மிகப்பெரிய தவறு என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறி உள்ளார். எலக்ட்ரிகல் இன்டர்லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு விபத்திற்கு காரணம் என கூறும் ஒன்றிய அரசு, அதை சரியான நேரத்தில் சரி செய்வதில் தோல்வி அடைந்ததுதான் விபத்துக்கான உண்மையான காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறி உள்ளார்.
* அரசியல் ஆதாயம் தேடுவதா?
ஜம்முவில் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், ஏதாவது மனித தவறு ஏற்படலாம். எதிர்வினை எப்படி இருந்தது என்பதுதான் முக்கியம். சில நிமிடங்களில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிரதமர் மோடியும் அங்கு சென்றார். ரயில்வே அமைச்சர் 36 மணி நேரம் முகாமிட்டிருந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவ அரசு தன்னால் இயன்றவரை முயன்றது. இது போன்ற விபத்து நடப்பது இது முதல் அல்ல. குறை சொல்பவர்கள் அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன’’ என்றார்.