புவனேஸ்வர்: ஒடிசாவில் 2 பேருக்கு பறவைக்காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பதால், அவர்களது மாதிரி பரிசோதனை முடிவுக்காக அதிகாரிகள் காத்துள்ளனர். ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் உள்ள பிபிலி பகுதி கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளில் சில கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மர்மமான முறையில் கோழிகள் இறந்தன. அதன் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து அப்பகுதியில் செயல்பட்ட கோழிப்பண்ணைகளில் இருந்த 10,000க்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன. மாநில அரசின் கால்நடை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசாவில் இரண்டு மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புவனேஸ்வரில் அமைந்திருக்கும் ஆர்எம்ஆர்சி-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று தாக்கியதை உறுதிப்படுத்த முடியும் என்ற சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பறவையிலிருந்து மனிதனுக்கு நோய் தொற்று பரவுவது அரிதானது என்றாலும், உயிருள்ள பறவைகளுடன் தொடர்பில் இருக்கும் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் ெதாற்று பரவ வாய்ப்புள்ளதாக டாக்டர் பிரக்யான் ரவுத்ரே கூறினார்.